×

5 ஆண்டுகளில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை: உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: நாடு முழுவதும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை பெறும் சட்டம் கடந்த 2017ல் ஒன்றிய பாஜ அரசால் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரம் மூலம் ஆளும் பாஜ அரசே அதிகமாக ஆதாயம் அடைந்துள்ளதாகவும், அக்கட்சி சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து, இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை உரியவர்களிடம் அரசியல் கட்சிகள் திருப்பி தரவும், மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து நன்கொடை விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவும் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திர விவரங்களை வழங்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதன் மனுவை ரத்து செய்து, நேற்று (மார்ச் 12) மாலைக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் தர நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று மாலை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரம் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. நாடு முழுவதும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளது.

187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை. தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் அனைத்தும் பென் டிரைவ் வடிவில் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவற்றை பட்டியலாக ஆணையத்தில் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய கட்சிகள், தொகை ஆகிய விவரங்களை ஆணையத்தில் அளித்துள்ளது.

The post 5 ஆண்டுகளில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை: உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Union Government ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...